Monday, August 10, 2009

யாஹுவுடன் கை குலுக்கியது மைக்ரோசாப்ட்


பல மாதங்களாக நீடித்து வந்த இழுபறி நிலையை மைக்ரோசாப்ட் மற்றும் யாஹூ நிறுவனங்கள் ஒரு பத்தாண்டு ஒப்பந்தத்தினைப் போட்டு முடிவிற்குக் கொண்டு வந்துள்ளன. தேடல் இயந்திரம் தொழில் நுட்பத்திலும் அதனைச் சார்ந்த விளம்பர வர்த்தகத்திலும் Google கொண்டிருக்கும் முதல் இடத்தை அசைத்துப் பார்ப்பதற்காகவே இந்த ஒப்பந்தம் இருக்குமோ என்ற எண்ணம் இணைய உலகில் அனைவருக்கும் எழுந்துள்ளது.
தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தப்படி Microsoft நிறுவனத்தின் Bing தேடல் இயந்திரத்தினை தன் தளத்தில் Yahoo பயன்படுத்திக் கொள்ளும். அத்துடன் விளம்பர இட விற்பனையை உலக அளவில் மேற்கொள்ளும் உரிமையை Yahoo மட்டுமே பெறுகிறது. Yahoo நிறுவனம், அதன் பயனாளர்கள் மற்றும் இணைய வர்த்தகச் சந்தை ஆகிய அனைத்திற்கும் பல பயன்களை இந்த ஒப்பந்தம் தரும் என்று Yahoo நிறுவன தலைவர் அறிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பால் ஸ்டீமர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் இரு நிறுவனங்களும் வெற்றி அடையும் ஒரு இனிய ஒப்பந்தம் இது என்று குறிப்பிட்டார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் யாஹூ நிறுவனத்தின் தேடல் இயந்திர தொழில் நுட்பத்தினைப் பத்து ஆண்டுகளுக்குப் பயன்படுத்த தனி உரிமையினைப் பெறுகிறது. இதனைத் தன் தளங்களில் இயங்கி வரும் தேடல் இயந்திர தொழில் நுட்பத்துடன் ஒருங்கிணைத்து பயன்படுத்தும். 18 மாதங்களுக்கு முன்புதான் யாஹூவை எடுத்துக் கொள்ள மைக்ரோசாப்ட் தன் முதல் அஸ்திரத்தை வீசியது. பிப்ரவரி 1, 2008 அன்று 4,460 கோடி டாலருக்கு விலை பேசியது. இது யாஹூவைப் பெரிய அளவில் உலுக்கியது. அதன் தலைவர் இடத்தில் புதிய ஒருவர் பொறுப்பேற்றார். மூன்று புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டனர்.
இருப்பினும் திரை மறைவில் இந்த இரு நிறுவனங்களும் தொடர்ந்து உறவாடிக் கொண்டு தான் இருந்தன என்று பலரும் பேசிக் கொண்டிருந்தனர். எல்லாம் எதற்காக? இணையத் தொழில் நுட்பத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள கூகுள் நிறுவனத்தை அதன் இடத்திலிருந்து இறக்கத்தான் இந்த ஏற்பாடுகள். தற்போது வந்த ஒப்பந்த அறிவிப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை தனி ஒரு சர்ச் இஞ்சின் நிறுவனமாக இயங்கி வந்த யாஹூ அந்த அடையாளத்தினை இந்த ஒப்பந்தம் மூலம் முறித்துக் கொண்டுவிட்டது.
மைக்ரோசாப்ட் முதலில் அறிவித்த பங்கு முதலீட்டினை ஜெர்ரி யாங் காட்டமாக மறுத்துத் தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதி தீவிர முயற்சிகள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து அடுத்து பங்குகளைக் கொண்டிருந்த கார்ல் தன் பக்கத்திற்கு மூன்று இயக்குநர் இடங்களைப் பிடித்தார். தாக்குப் பிடிக்க முடியாத ஜெர்ரி யாங் தலைவர் பதவிலியிருந்து இறங்க கேரல் பார்ட்ஸ் யாஹூவின் தலைமை நிர்வாக அதிகாரியானார்.
ஒரு பெண்ணுக்குரிய நிதானம் மற்றும் வேகத்துடன் சிந்திக்கத் தொடங்கி கேரல் பல நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டே இருந்தது. இதற்கு வலுவான காரணமும் இருந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் தேவையான பணமும் இருந்தது; தேவைகளும் இருந்தன. இந்த பிரிவில் உயரச் செல்ல ஆசையும் இருந்தது. யாஹூ ஏற்கனவே உயரத்தில் இருந்ததால் அதனைப் பிடிக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டது. அதே நேரத்தில் யாஹூ தன் செலவுகளைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது. வெளியிலிருந்து சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தினைப் பெற்றால் ஆண்டுக்கு 50 கோடி டாலர் மிச்சம் பிடிக்க முடியும் என்று பார்ட்ஸ் கருதினார். இன்றைய ஒப்பந்தம் குறித்துப் பேசுகையில் அனைவரும் இந்த பணம் மிச்சமாவதனையே குறிப்பிட்டனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தின் திறனும் தன்மையும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே இது யாஹூ நிறுவனத்திற்கு பெரிய உறுதுணையாக இருக்கும். இப்போதைய ஒப்பந்தம் யாஹூவின் பணிக் கலாச்சாரத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த 18 மாதங்களாகத் தன் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி முன்னேற்றப் பாதையினைப் பார்க்க உழைத்துக் கொண்டிருந்த யாஹூ திடீரென இன்னொரு நிறுவனம் அமைத்த தொழில் நுட்பத்தினைத் தழுவிக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு நிறுவனங்களுக்குமே ஒரு புதிய பாதையைக் காட்டியுள்ளன. ஒவ்வொரு மாதமும் தன் தளத்தில் வந்து தேடும் 30 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சேவை அளித்துத் தக்க வைக்க வேண்டிய நிலையில் யாஹூ உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விளம்பரங்களையும் விற் பனை செய்திடும் உரிமை யாஹூவிற்குப் பெரிய அளவில் கை கொடுக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: கம்ப்யூட்டர்மலர்

2 கருத்துரைகள்:

Anonymous said...

மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com

நன்றி
ஈழவன்

தகவல் தொழில்நுட்பப் பூங்கா said...

தகவலுக்கு நன்றி