Wednesday, August 12, 2009

தமிழ் இடைமுகத்துடன் (Interface) hotmail,livemail

ஹொட்மெயில் ஆரம்பத்தில் ஒரு இந்தியரால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தவேளையில் அதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கிக்கொண்டது. பின்னர் Hotmail இணையப்பயனர்களிடையே மிகப்பெரிய ஆதரவுபெற்ற இணைய மின்னஞ்சல்சேவையாகத் திகழ்ந்தது. பின்னர் Gmail வந்தவுடன் நிலைமைகள் மாறத்தொடங்கியது.

பல பேர் வேகமாக ஜிமெயிலுக்கு மாறத் தொடங்கினர். ஜிமெயிலின் வெற்றிக்கு காரணம் 1GB சேமிப்பிடம் வழங்குவோம் என்று வாக்களித்தமையுடன் எளிமையான இடைமுகத்தையும் (Interface) வழங்கியமையே ஆகும்.

இதன்பின்னரும் பல மின்னஞ்சல் சேவைகள் பாவனைக்கு வந்தாலும் ஜி-மெயில் போல எந்த ஒரு மின்னஞ்சல் சேவையும் வெற்றி பெறவில்லை. ஏற்கனவே சந்தையில் இருந்த Yahoo,Hotmail போன்றோரும் சேமிப்பிடத்தை அதிகரித்து தம்மை விட்டு ஓடும் பயனர்களைக் காத்துக்கொண்டனர்.

முதல் கட்டமாக இவ்வாறு வசதிகளை வழங்கி மக்களைக் கவர்ந்தவர்கள் பின்னர் மெல்ல மெல்ல பல்வேறு மொழிகளில் இடைமுகத்தை வழங்கி மக்களைக் கவர முற்பட்டனர். இந்த இலவச மின்னஞ்சல் சேவை வழங்குனர்களிடையே போட்டி அதிகரிக்க அதிகரிக்க பாவனையாளர்கள் அதிகளவு பயனை இலவசமாகப் பெற்றனர்.

நான் அறிய முதலில் தமிழ் இடைமுகத்தை வழங்கியது வெப்துணியா மெயில். அதன் பின்னர் பிற மின்னஞ்சல்கள் வழங்கத்தொடங்கின.

இந்த சேவைகள் தமிழில் வழங்கப்பட்டாலும் இவற்றினால் Gmail போன்ற சேவைகளுடன் போட்டிபோட முடியாது. ஏன் எனில் ஜிமெயிலில் வழங்கப்படும் சேவைகளில் பாதிகூட இங்கு இருக்காது. இந்த தமிழ் இடைமுக சேவைகளில் அடிப்படை வசதிகளை மட்டுமே வழங்கியிருப்பர்.

இந்தவேளையில்தான் முதன்முதலாக ஹிந்தி இடைமுகத்தை கூகிள் ஜிமெயிலுக்கு வழங்கியது. இதைப் பார்த்து உலகெங்கும் வாழும் தமிழர்களும் ஆர்ப்பரித்தனர் காரணம் அடுத்ததாக வரிசையில் தமிழ் வரக்கூடும் எனும் காரணமே.
ஆயினும் ஆண்டுகள் மேல் ஆண்டுகள் ஓடியும் ஜிமெயில் தமிழ் இடைமுகத்தை வழங்கவில்லை. இதனால் தமிழ்கணனி ஆர்வலர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

சில வருடங்களின் பின்னர் மெல்ல மெல்ல கூகிள் தன் தயாரிப்புகளை ஹிந்தி தவர்ந்த பல இந்திய மொழிகளில் வெளியிடத் தொடங்கியது. இக்காலகட்டத்தில்தான் orkut, Google Docs போன்ற சேவைகள் தமிழில் அறிமுகம் ஆகியது.

அப்போதுகூட பல தமிழ் ஆர்வரலர்களும் ஜிமெயில் தமிழில் எடுப்பதை விட்டுவிட்டு மற்றதயாரிப்புகளை தமிழுக்கு மாற்றுவது முட்டாள்தனமான வேலை என்று பொரிந்து தள்ளினர். திடீர் என ஒரு நாள் ஜிமெயில் தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டது.

அன்றய தினத்தில் பலரும் கூகிளைப் பாராட்டி மகிழ்ந்தமையும், கணித்தமிழ் இணைய உலகில் பலம் பெற்றுதிகழ்வதற்கு இது ஒரு உதாரணம் எனவும் மக்கள் ஆர்ப்பரித்தனர்.

இதனைத் தொடர்ந்து யாகூ மெயில் தமிழில்வரும் என்று எதிர் பார்த்தாலும் வழமை போல யாகூ தமிழர்களை ஏமாற்றிவிட்டது. ஆனால் Microsoft தன்னுடைய Hotmail, Livemail சேவைகளை தமிழில் வழங்கி தமிழர்கள் பாராட்டைப் பெற்றுள்ளது.

தமிழ் இடைமுகத்தை Livemail இல் அல்லது Hotmail இல் பெற்றுக்கொள்ள முதலில் அவர்களின் மின்னஞ்சல் சேவைக்குள் புகுபதிகை செய்யவும்.

பின்னர் இங்குள்ள படிமத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Options என்பதை சொடுக்கவும்.













பின்னர் English என்பதைசொடுக்கவும்.
பின்னர் காட்டப்படும் மொழிகளில் “தமிழ்” என்பதை தெரிவு செய்யவும்.
இதன் பின்னர் நீங்கள் அருமையான தமிழ் இடைமுகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இன்றைய இலத்திரணியல் உலகில் தமிழ்மொழி பல்வேறு துறைகளிலும் கொடிகட்டி பறக்கின்றன. ஆயினும் மேலும் தமிழ் வியாபிக்க வேண்டிய துறைகள்,இடங்கள் இன்னும் இருக்கின்றன.

இந்த தமிழ் இடைமுகத்துடன் கூடிய வலைமனைகளை வாசித்து அறிய முடியவில்லை என்று குறை கூறம் பல நண்பர்கள் தமக்கு ஆங்கிலம் தெரியும் என்பதையும் பலர் ஆங்கிலம் தெரியாமல் இருப்பதையும் மறந்து விடுகின்றனர். தமிழ் மட்டுமே தெரிந்த இணையப்பயனர்கள் உருவாகும்போது இவ்வாறான தமிழ் இடைமுகங்கள் பெரும் பங்காற்றும்.

தமிழரான நாங்களே இவ்வாறான முயற்சிகளில் பங்களிக்காது விட்டால் வேறு யார் இந்த தமிழ் இடைமுகங்களைப்பாவிப்பர்???? நான் ஏற்கனவே Gmail,Hotmail தளங்களில் தமிழ் இடைமுகங்களையே பாவிக்கின்றேன். சில நாட்கள் புரியாமல் இருந்தாலும் போகப்போக பழக்கமாகி விடுவதுடன் நன்கு பரீச்சயமாகியும் விடுகின்றது.

தமிழைத் தமிழாய் இணையத்தில் பயன்படுத்துவோம்!!!! .